Tuesday, November 27, 2007

சிந்தாநதியுடன் ஒரு உரையாடல்

பதிவர் சிந்தாநதியின் கேள்விகளுக்குக் காசியின் பதில்கள்

இணையத்தில் தமிழ் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது?


எங்க நண்பர் சுபாஷ் நகைச்சுவையாகச் சொல்வார்:'என்ன இருந்தாலும் வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான், வேலக்காரங்கூட இங்லீஸ் பேசுறான்':-). 'ஆங்கிலம்தான் உலக மொழி, ஆங்கிலம் அறிந்தவர்கள் மேன்மக்கள், ஆங்கிலப் புலமை இருந்தால் மேதைமை தானே வரும்' என்பது போன்ற எண்ணங்கள் தமிழ்நாட்டில் பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். சில வருட அமெரிக்க வாழ்க்கை ஓரளவுக்கு இந்தமாதிரியான கருத்துக்கள் எத்தனை தட்டையானவை என்று உணரச் செய்தது. அதேபோல இணையம் என்பது அன்றாட வாழ்க்கை, தொழில், வியாபரத்துக்கு எத்தகைய பலன்களை பொதுமக்களுக்குக் கொண்டு வரக்கூடியது என்றும் அனுபவரீதியில் உணரவும் அதே அமெரிக்க வாழ்க்கை உதவியது. (ஆனால் நம் ஊரில் இன்னும் பல 'மேதை'களே இணையத்தில் தமிழ் வந்தால் நல்ல கதை, சினிமா, ஜோக் எல்லாம் இணையம் வழியாகக் கிடைக்கும் என்று அதன் வீச்சை சுருக்குவதில் முனைப்பாக இருக்கிறார்கள்)

தமிழ் வழிக் கல்வி கற்று, தமிழை மட்டுமே படிக்கத் தெரிந்த சுற்றத்தையும் கொண்டு (எழுதப் படிக்கக்கூடத் தெரியாத அம்மா!), தமிழ் வழியாக மட்டுமே அன்றாட வாழ்வை நகர்த்தும் பெரும் சமுதாயத்துடன் வாழ்பவனுக்கு தமிழ்மீது ஆர்வம் என்பது இயல்பானதே. 2001-இல் அமெரிக்கா போனபிறகு, நேரம் அகப்பட, இணைய நுட்பம் வசப்பட ஆரம்பித்ததும் தமிழை இணையத்திலே தேடியதும் அத்தகைய இயல்பின் நீட்சியே. அப்படித் தேடி, பற்றாக்குறையைப் பார்க்கும்போது மேலும் வீரியப்பட்டதே இணையத்தில் தமிழைப் பரவலாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம். மற்றபடி 'உலகின் முதல் மொழி', 'ஆண்டவன் இடது கையால் ஒன்றையும் வலது கையால் இன்னொன்றையுமாக நேரடியாக அருளியது', 'தமிழனுக்குக் கொம்பு முளைத்திருக்கிறது' என்பதாலெல்லாம் அல்ல:-). என் அடையாளமாயும், சமூக வாழ்க்கைக்கான மொழியாயும் தெலுங்கோ, கன்னடமோ, மராத்தியோ இருந்திருந்தாலும் அவற்றின்மேலும் இதே ஆர்வம் கொண்டிருப்பேன் என்பதுதான் உண்மை.

தமிழ் வலைப்பதிவுகள் உங்களுக்கு அறிமுகமானது எப்படி? எப்போது?

2003 ஜூலை-ஆகஸ்ட் வாக்கில் என்று நினைக்கிறேன். இஸ்கான் நண்பர் ஒருவர் கிளப்பிவிட்ட ஆர்வத்தில் வைணவத்தின் வேர்கள் தேடிப் போனபோது நா.கண்ணனின் பாசுரமடல், அதிலிருந்து யாஹூகுழுக்கள், அங்கிருந்து நா. கண்ணன், கனடா வெங்கட், மாலன் போன்றவர்களின் வலைப்பதிவுகளை அறிந்தேன். இணையத்தில் தமிழைக் கண்டதும் ஆனந்தமாக இருந்தது. அப்போதே மதி கந்தசாமியின் வலைப்பதிவர் பட்டியலைத் தெரிந்துகொண்டு உலாவிக்கொண்டிருந்தேன். தொடுப்புக் கிடைத்த பக்கமெல்லாம் பயணித்தேன். வலைப்பதிவு தொடங்குவது பற்றிய சுரதாவின் செயல்முறைக் குறிப்புகளும் மதி சேகரித்து வைத்திருந்த பல சுட்டிகளும் புதியவர்களுக்குப் பல சங்கதிகளைச் சொல்லிக்கொடுத்தன. மாலன் திசைகள் இதழில் எழுதிய வலைப்பதிவுகள் பற்றிய கட்டுரை இதன்மேலான ஆர்வத்தைக் கூட்டியது. 2003 செப்டம்பரில் ஒரு நாள், தமிழ்வலைஞர்களுக்கு ராகுகாலம்: 'தொபுக்கடீர்' என்று இதில் குதித்தும் விட்டேன். :-))
ஆரம்ப கால தமிழ் வலைப்பதிவுகள் எப்படி இருந்தன?
ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தி சொல்லுவனவாக இருந்தன. வாசகரை நேரடியாக விளித்து இடையூடாடும் பாணி அல்லாதது ஒரு வகையில் impersonal நடையில் அமையக் காரணமாயிருந்தது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை அடக்கத்தில் நிறைவாய் இருந்தன. மொக்கைகள், ஒத்தி ஒட்டுதல், தனிமனித ஆராதனை/வன்முறை, குழுமனப்பான்மை, போன்றவை பெரிதும் இல்லை. புனைவு இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், ஆன்மீகம், பயணக்கட்டுரைகள் போன்றவை இருந்த அளவுக்கு அரசியல், சமூகம் போன்றவை தொடப்படவில்லை. வழமையான ஊடகங்களில் பல காரணங்களால் மறைக்கப்பட்ட இத்தகையவை எழுதப்படுவதே வலைப்பதிவின் தனிப்பட்ட சிறப்பாக இன்று உணரப்படுவதால் அந்த வகையில் முதற்கட்ட வலைப்பதிவுகள் சற்று தீவிரம் குறைந்தே காணப்பட்டன.

நுட்பரீதியில் பல சிக்கல்கள் இருந்தன. யுனிகோடு முறைமையின் குறைபாடுகளின் மேல் வருத்தம் கொண்டு டிஸ்கி குறியேற்றத்தில் எழுதப்பட்டவையும் இருந்தன.(முக்கியமானவை ரமணீதரன், இராம.கி, போன்றோர் எழுதியவை) ப்ளாக்கர் மட்டுமல்லாமல் மேலும் பல சேவைகளை (ப்ளாக்ட்ரைவ், ரிடிப்ப்ளாக்ஸ், போன்றவை) மக்கள் பயன்படுத்தினர். ப்ளாக்கரில் செய்தியோடை வசதி இல்லை, மறுமொழி வசதி இல்லை. மறுமொழிக்கெனத் தனிச்சேவைகள் (ஹலோஸ்கேன், பேக்ப்லாக், போன்றவை) கிடைத்தன. விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் பரவலாகாததால் (உடைக்கப்படாததாலோ இருக்குமோ:) இயங்கு எழுத்துருவின் தேவை இருந்தது. உமர் செய்த உதவியால் இது சாத்தியப்பட்டது. திரட்டிகள் என்று பெரிய அளவில் யாரும் பழகவில்லை. ப்ளாக்கர் ஆடம் செய்தியோடை வசதி கொண்டுவந்த பின்னரே ஒரு பாய்ச்சலுக்குத் தமிழ்வலைப்பதிவுகள் தயாராகின.

தமிழ்மணம் திரட்டியின் வரவு முந்தைய பாணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறைந்த பட்சக் கவனம் கிடைப்பது உறுதியானதால் ஆர்வம் வற்றாமல் பலரும் எழுத முடிந்தது. மறுமொழி நிலவரத்தையும் திரட்டிக் காட்ட ஆரம்பித்ததும், வலைப்பதிவும் ஒரு பெரும் இடையூடாடும் வடிவமாக, விவாத மேடையாக உருப்பெற்றது. அதனால் தீவிர விவாதங்கள், மாற்றுக்கருத்துக்கள் என்று களம் சூடாகத் தொடங்கியது. அதே நேரத்தில் இந்த வசதிகளே பல பக்கவிளைவுகளுக்கும் காரணமாயின.

உங்கள் வலைப்பூ* அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள், இப்போதைய வலைச்சரம் பற்றிய உங்கள் கருத்து, ஆலோசனைகள் என்ன?

வலைப்பூ என்பது மதியின் யோசனையில் உருவான, ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஒரு வலைப்பதிவு. (இடையில் என்னையும் சக ஒருங்கிணைப்பாளராக மதி அழைத்து, நானும் சில காலம் இருந்தேன்.) தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்கக் கட்டத்தில் அவற்றின் வளர்ச்சிக்கு மதியின் பங்களிப்பு வேறு எதையும்விட அதிகப் பங்காற்றியிருக்கிறது. அன்றிருந்த ஒவ்வொரு பதிவருடனுமே மதிக்கு நேரடி அறிமுகம் இருந்தது. கேட்காமலேயே ஓடிவந்து உதவும் அவரின் பாங்கு ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. 'வலைப்பூ' வலைப்பதிவை ஒருங்கிணைக்க இவை மிகுந்த தேவைகளாயும் தகுதிகளாயும் ஆயின. 'வலைப்பூ' பின்னாளில் தமிழ்மணம் திரட்டியில் 'இந்த வார நட்சத்திரம்' பகுதியாகப் பரிணாமித்த போது அதற்கான பங்களிப்பை மதி செய்ய இந்தக் கூடுதல் திறமையும் தகுதியுமே காரணிகளாக இருந்தன.

தனிப்பட்ட அளவில் சுவையான அனுபவங்கள் என்று அடுக்குவதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. பொதுவாகச் சொல்வதானால், திரட்டிகள் இல்லாத அந்தக் கட்டத்தில் வலைப்பூ பலரும் ஒருவரை ஒருவர் அறியும் ஒரு மேடையாக, அரங்கமாக இருந்து வலைப்பதிவுகள் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. பொதுவான பிரச்னைகள் பேசப்பட்டன. படித்ததில் பிடித்தவை அடையாளம் காட்டப்பட்டன. சில சிரமங்களும் நினைவில் உள்ளன. அதைப் பற்றிப் பேசி இன்று ஆகப்போவது ஒன்றுமில்லை.

இன்று வலைச்சரம் அன்றைய வலைப்பூ செய்ததையே முயற்சிக்கிறது. ஆனால் வலைச்சரத்துக்குச் சரியான வெளிச்சமில்லை. அன்று திரட்டியென்று ஒன்றும் இல்லாததால் வலைப்பூவுக்கு இயற்கையான முக்கியத்துவம் கிட்டியது. திரட்டிகள் வந்தும் தமிழ்மண முகப்பில் காட்டப்படுவதால் 'நட்சத்திர'த்துக்குக் கவனம் கிடைக்கிறது. வலைச்சரத்துக்கு அப்படி ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும்! ஆனாலும் பணியை நன்றாகச் செய்துவருகிறார்கள் வலைச்சர ஆசிரியர்கள். பின்னிருந்து இயக்கும் சிந்தாநதியும் அனுபவம் நிறைந்தவர், சமூக அக்கறை நிறைந்தவர். எனவே சரியான ஆசிரியர்களை எளிதில் அடையாளம் காணவும் அணுகவும் இயலுகிறது. இன்னும் நட்சத்திரங்கள் தொடாத, 'வலைச் சமூகப் பொது விசயங்கள், நுட்ப சங்கதிகளை' விளக்கும், விவாதிக்கும் இடமாகவும் இது மாறலாம் என்பது என் யோசனை:-)

தமிழில் ஒரு திரட்டி உருவாக்க வேண்டும் என்ற பொறி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

வடிவமைப்புப் பொறியாளனும் பொடிஜாமானக் கிறுக்கனுமான (gadget geek) எனக்கு எப்போதுமே 'உள்ளதே போதும்' என்ற மனநிலை ஏற்படாது. 'இதை இன்னும் எப்படிச் சிறப்பாக செய்யலாம்?' என்றேதான் சிந்திப்பேன். மதியின் அழைப்பை ஏற்று தமிழ்வலைப்பதிவுகள் பட்டியலை நிர்வகிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட போது, பட்டியலில் பதிவுகளைச் சேர்ப்பதை எப்படித் தானியங்கியாக்கலாம், மேற்கொண்டு பட்டியலை எப்படி பெயர்வாரியாக, வசிப்பிடவாரியாக, வலைப்பதிவு தொடங்கிய தேதிவாரியாக அடுக்கலாம், என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். அத்துடன் கூடுதலாக என்னெல்லாம் செய்யலாம் என்று கலவையாக ஒரு வடிவத்தை கற்பனை செய்தேன். அந்தக் கற்பனை வடிவத்துக்கு திரட்டி என்ற பொதுப்பெயரெல்லாம் அப்போது யாரும் இடவில்லை. இந்த சாத்தியங்களைப் பட்டியலிட்டு சக ஒருங்கிணைப்பாளரான மதிக்கும், தமிழ் இணையத்தில் நுட்பம் சார்ந்த பல சேவைகளைச் சத்தமில்லாமல் சாதிக்கும் சுரதாவுக்கும் அனுப்பினேன். ஆனால், எப்படி, யார், எப்போது செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை. அங்கிருந்துதான் தமிழ்மணம் தொடங்கியது.

தமிழில் ஒரு திரட்டி உருவாக்க எந்த முன்மாதிரியும் இல்லாதிருந்த வேளையில் எப்படி அதற்கான தொழில் நுட்பம் வடிவம் போன்றவை உங்களுக்கு கிடைத்தது?

முன்மாதிரியுடனே எல்லாரும் தொடங்கணும்னா அதுக்கு யாராவது ஒரு முன் மாதிரி வேண்டுமில்லையா? (பெருமையடித்துக்கொள்வதென்று ஆகிவிட்டது, பிறகென்ன கூச்சம்:-)) புத்துருவாக்கம்(INNOVATION) எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட ஒரு திறன். என்னைத் தொழில்ரீதியாக அறிந்தவர்கள் இதை ஒத்துக்கொள்வார்கள். (இந்தியாவிலும் அமெரிக்காவிலும் காப்புரிமையுடன் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன, காப்புரிமை பெறாத, நான் தொழிலில் செயற்படுத்தியவை பல) எனவே முன்மாதிரி இல்லாமல்தான் தமிழ்மணம் முயற்சிக்கப்பட்டது. இன்றைய எங்கள் தொழிலகத்தின் பெயர் கூட NuHom Innovations Pvt. Ltd.

இணையத் தொழில்நுட்பத்துக்குள் என்னை இழுத்துவிட்டதுக்குத் 'தமிழா'(இ-கலப்பை) முகுந்த்துக்குத் தான் நன்றி சொல்லவேண்டும் (திட்டுவதானாலும் அவரைத்தான் திட்டணும்;-). அவர் அழைத்து நான் இறங்கிய நியூக்ளியஸ் என்ற (இன்றைய வேர்ட்பிரஸ் போன்ற) வலைப்பதிவு மென்கலனை தமிழ்ப்படுத்தும் முயற்சியால் PHP என்ற மொழியின் இருப்பையும், அதன் சாத்தியங்களையும் புரிந்துகொண்டேன். முறையாக கணினிப் பள்ளி எதற்கும் போனதில்லையானாலும் ஏற்கனவே என் பணித்தேவை மற்றும் ஆர்வம் காரணமாக BASIC, TurboPascal, TurboC, FORTRAN, AutoLISP, APDL போன்ற மொழிகளில் நிரலெழுதியிருக்கிறேன். (இன்னும் வழக்கொழிந்துபோன IDEAS-Language-ம் உண்டு). இவற்றில் ஒவ்வொன்றிலும் 1000 வரிகள் உள்ள நிரல்கள் கூட எழுதியிருக்கிறேன். அத்தனையுமே எனக்கு அல்லது என் குழு உறுப்பினர்களின் பயனுக்காக எழுதப்பட்டவை, வணிகரீதியில் அல்லாமல், மென்பொருளாக்க வழிமுறைகளுக்கு அடங்காமல் எழுதப்பட்டவை. இந்த அனுபவத்தால் புதிய கணினி மொழி கற்றுக்கொள்வது எளிதாக இருந்தது.

பிஹெச்பி திறமூல நிரலாளர்கள் பெரிதும் பயன்படுத்தும் மொழியாதலால் பல நிரல்துண்டுகள், யோசனைத் துணுக்குகள் இணையத்தில் சிதறிக் கிடந்தன. இவை இல்லாவிட்டால் என்னால் இத்தனை நேர்த்தியாக(?) உருவாக்கியிருக்க முடியாது. உதாரணமாக MAGPIERSS என்ற செய்தியோடை திரட்டும் நிரற்பொதி மிகவும் அத்தியாவசியமான திரட்டுதல் என்ற ஒரு செயலுக்கு உதவியது. இவை பெரும்பாலும் GPL என்ற உரிமத்தின் கீழ் இலவசமாகப் பயன்படுத்த, மாற்றியமைத்துக்கொள்ள வெளியிடப்பட்டவை. தமிழ்மணத்திலிருந்து நான் விடைபெறும்போது அதன் நிரல்களில் சுமார் 30-40% இப்படியான கொடைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாயும், மீதம் தமிழ்மணத்துக்கெனவே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாயும் இருந்தன.

விருப்பமிருப்பவர்கள் தமிழ்மணம் தளத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்க:
  1. வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்
  2. தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள்
  3. தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி
  4. தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்
  5. தமிழ்மணம் - 365
  6. போலீஸ் வேலை
  7. நினைவூட்டல் (நன்கொடை)
  8. வழங்கி மாற்றம் நிறைவு
  9. விரிவுபடுத்தப்பட்ட தமிழ்மணம் நிர்வாகக் குழு
  10. ஒரு அறிவிப்பு
  11. சில முயற்சிகள் சில அனுபவங்கள் -12
மேலும் தமிழ்மணம் முதல் பதிப்பைப் பார்த்திராதவர்கள் இங்கே சென்றால் பார்க்கலாம்.

தமிழ்மணம் தளத்தின் வளர்ச்சியை (உருவாக்கும்போது
நான் கடந்த படிகளை) பார்க்க விரும்பினால் கீழே சில படங்களை இணைத்துள்ளேன்.






தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள். மாலன் திசைகள் இதழில் தலையங்கமே எழுதிப் பாராட்டினார். பலரும் என் பதிவுகளின் மறுமொழியூடாகவும், தனிமடல் வழியாகவும் பாராட்டி வரவேற்றிருந்தார்கள். ஒரேயடியாக 'வாழ்நாள் சாதனை' என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியவர்களும் உண்டு்:-) இது பற்றிய அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட இடுகைகளை நேரடியாக வாசிப்பதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும். (மேலே பார்க்கவும்)

எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும். தமிழ்மண அனுபவத்தில் அப்படியான அனுபவங்கள் பற்றி?

முதலில் 'எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும்' என்பது சரியா?. 'ஏன், எதிர்ப்பு ஒன்று இருந்தே ஆகவேண்டுமா? இது என்ன வக்கிர சிந்தனை?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய அனுபவம் நீங்கள் சொல்வது சரியென உணர்த்துகிறது. எதிர்ப்பு இருந்தது, வெளிப்படையாக அல்ல, நீறுபூத்த நெருப்பாக! ஏற்கனவே இணைய இதழ்/குழுமங்கள் வாயிலாக இணைய ஊடகத்தையும் வழமையான தமிழ் ஊடகச் சூழலைப்போல மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த வெகு சிலருக்கு மட்டுமே தமிழ்மணத்தின் வரவு எட்டிக்காயாய்க் கசந்தது. மற்றபடி எல்லாரும் மனதாரப் பாராட்டி வரவேற்றார்கள்.

இந்த எதிர்ப்புணர்வு உள்ளுக்குள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டுத் தமிழ்மணம் பயனுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலான அரசியல் சமூக நிகழ்வுகளில் (உ-ம். சங்கராச்சாரியாரின் கைது) வழமையான 'நாகரிக ஊடக உலக'த்தைப் போல அல்லாமல் எவ்வித ஒளிவு மறைவும் பாசாங்கும் இன்றி விமர்சனங்களும் விவாதங்களும் நடப்பது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது. இதற்கெல்லாம் மேடை போட்டுக் கொடுத்தது என்ற வகையில் அந்த எதிர்ப்பெல்லாம் தமிழ்மணத்தின் மேல் பாய்ந்தது. (தங்கள் ஆட்களால்) கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களையே பார்த்து வந்த இவர்கள் ஏதோ தமிழ்மணமே அப்படியான எழுத்துக்களை வேண்டி விரும்பி வெளியிடுவது போன்று நினைத்துக் கொண்டதும் வேடிக்கை. 'இது தானியங்கி, எல்லாக் கருத்துகளையும் வடிகட்டாமல் காட்டுகிறது' என்பது போன்ற அறிவார்த்தமான உண்மைகளை உணருவதற்கு, அவர்கள் மேலாண்மைக்கு ஏற்பட்ட பங்கமும், அவர்களின் புனித பிம்பங்கள் சாதாரணர்களாகிப்போனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தடையாய் இருந்தன.

தமிழ்மணத்தின் இருப்பையும் பணியையும் மறுப்பது, சிறுமைப்படுத்துவது என்று தொடங்கி, போலி விவகாரம் போன்ற சர்ச்சைகளில் தமிழ்மணத்தின் பக்கச்சார்பற்ற சாத்தியத்துக்குட்பட்ட நிலையைப் புரிந்துகொள்ளாமல் சாடுதல் என்று நீண்டது. இதன் முத்தாய்ப்பாகத்தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகள். இவற்றின் ஊடே 'தமிழ்மணத்தை மூடிவிட்டுப் போயேன்' என்ற வசைகளும் பலமுறை வைக்கப்பட்டன. தமிழ் வலைப்பதிவுகளைச் சிறுமைப்படுத்துவதையும் குழுமங்களில் வாசிக்கக் கண்டிருக்கிறேன். மாற்று ஊடகமாகத் தமிழ்மணம் ('தமிழ் வலைப்பதிவுகள்' அன்று பெரும்பாலும் 'தமிழ்மண'மாகத்தான் இருந்தது எதிர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை) வளர்வது எவருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களால்தான் இந்த 'மூடிவிட்டுப் போயேன்' சொல்லமுடியும் என்பது புரிந்ததால், இந்த ஒரு காரணத்துக்காகவே இதை என்றும் மூடிவிடக்கூடாது என்று உறுதி பூண்டேன்.

என் பின்னணியையும் இந்த எதிர்ப்பாளர்கள் பின்னணியையும் பார்த்தால், நான் இணையத்துக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள் முன்பிருந்து இவர்கள் தமிழ் இணைய சூழலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். நான் தமிழ்மணம் வெளியிடும்போது தமிழிணையத்தில் இயங்கத்தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆக, 'எங்கிருந்தோ வந்தான், இதைச் சாதித்தேவிட்டான்' என்ற பொறாமையும் இவர்களில் சிலருக்கு இருந்திருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது. இவர்களோடே அனுபவத்தால் பாடம் கற்ற நீண்டநாள் தமிழிணைய வாசிகள் பலரும் அவ்வப்போது அறிவுறுத்தியதற்கும் ஆதரவளித்ததற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

நீங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, வளர்த்து விட்ட தமிழ்மணம் இப்போது உங்கள் கையில் இல்லை. இந்த முடிவு எதனால் எடுக்கப் பட்டது?

முதல்கட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து அவற்றுக்குச் சரியான பதிலாக தமிழ்மணம் இரண்டாம் பதிப்பு (கிட்டத்தட்ட இன்று காணும் வடிவம், ஆனால் பல புது அம்சங்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதற்கு உழைக்கும் நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்) வெளியிட்டு, அதுவும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. என் தொழில்/வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகள் தொடர்ந்து இதில் ஈடுபடுவதற்கு சவாலாக இருந்தபோதும் விடாப்பிடியாகத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.முதல் பதிப்பிலிருந்தே உதவிய நண்பர்கள் செல்வராஜ்/மதி கந்தசாமியோடு, இளவஞ்சி/பிரகாஷும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

ஆனாலும், முறையற்ற தாக்குதல்கள், கனவான்களின் அவதூறுகள், தமிழ்மணம் 'இந்திய இறையாண்மைக்கு எதிரான திராவிட/தமிழ்-தேசியக் குரல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது' என்ற இட்டுக் கட்டப்பட்ட கருதுகோள் காரணமாக தூற்றல்கள், அவற்றுக்குப் பெருங்கனவான்களின்/ கனவாட்டிகளின் மறைமுக ஆதரவு, 'எது நடந்தாலும் எனக்கென்ன?' என்று மெரினா மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்ட பதிவர் பெருமக்கள் என்று எக்கச்சக்கமான எதிர்மறை நிகழ்வுகள் என்னை 'போதும், போய் உன் வாழ்க்கையையும் தொழிலையும் பார்' என்று துரத்தின. இவையே தமிழ்மணத்தை நான் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம். இந்தக்காரணிகள் பெரும்பாலும் இன்னும் மாறாத பொழுதும், இன்று தங்கள் பொருளையும், உழைப்பையும் செலவிட்டுத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து நடத்தும் டி.எம்.ஐ. நண்பர்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் வருத்தமாயும் மறுபக்கம் பெருமையாயும் உள்ளது.

தமிழ்மணம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு எற்பட்ட பயன்கள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

தமிழ்மணம் தவிர்த்தும் வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குப் பலரும் தனியாகவும் கூட்டுழைப்பிலும் பலதைச் செய்திருக்கிறோம். தமிழில் எழுதலாம் வாருங்கள் வலையில் பரப்பலாம் பாருங்கள் என்ற என் கட்டுரைத்தொடர் படித்து வலைப்பதிக்க வந்தவர்கள் பலர். ஆனாலும் தமிழ்மணம் மூலம் தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குக் கொடுத்த உத்வேகம் இன்னும் பலமானது. சில வரிகளில் சொல்வதானால்:
  • வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.
  • வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.
  • வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
  • பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.
  • மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.
  • தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.

'இந்தி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறைப்படுவதே 'இந்திய மொழி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறை கொள்வது (Hindi=Indic, பார்க்க: Bhasha Blogs: Indic Blogs in the Indian Blogosphere) என்றாகி விட்ட சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் முதன்மையான ஒரு நிலையை அடையத் தமிழ்மணம் சிறப்பான பங்காற்றியுள்ளது. பார்க்க: http://www.myjavaserver.com/~hindi/
(கீழே கடைசிப் பத்திகள் சென்று பார்த்தால் இந்தப் படம் தெரியும்)


முதன்முதலாக ஒரு தமிழ்த் தளத்தை வியாபார ரீதியாக விற்பனை செய்ய முடிந்தவர் நீங்கள் தான் என்று கூறப்படுவது பற்றி?

இருக்கலாம், எனக்குத் தெரியாது. இப்படி ஒரு செய்தி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதில் விற்பனையில் என்னுழைப்புக்காக, சிந்தனைக்காக என்று நான் பெற்றுக்கொண்டது நயாபைசாவும் இல்லை. தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு என் நேரத்தை செலவிட முடியாது என்று புரிந்தபோது, ஆர்வக்கோளாறு காரணமாக சில நிரலாளர்களைச் சம்பளத்துக்கு வைத்து, இடம், கணினி, இணையத்தொடர்பு என்று ஏற்படுத்தி அவர்களுக்காகச் செலவு செய்த பணம்தான் நான் பெற்றுக்கொண்ட விற்றுமுதல்! தமிழ்மணத்துக்காக நான் செலவிட்ட நூற்றுக்கணக்கான மணி நேரங்களை என் தொழிலுக்காகவோ, குடும்பத்துக்காகவோ, குறைந்த பட்சம் ஒரு சாதாரண வலைப்பதிவனாகவோ செலவிட்டிருந்தேனானால்கூட:) நான் அடைந்திருக்கக்கூடிய பலனை(?) எண்ணிப் பார்த்தால் ...

வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்த நீங்கள் திடீரென நாடு திரும்ப எண்ணியது எதனால்?

அமெரிக்காவில் நான்கு வருடங்கள் வாழ்ந்தோம். சுயதொழில் முயற்சிக்கு மூலதன முதலீடாக ஒரு தொகையைச் சேர்த்துக்கொண்டு ஊர் திரும்புவதாகத் தான் போகும்போதே திட்டம். அதனால்தான் என்னுடன் வந்த நண்பர்கள் சிலர் அமெரிக்காவில் பச்சை அட்டைக்கும், கனடாவில் நிரந்தரவாசி உரிமைக்கும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், ஒன்றுக்கும் முயலாமல் இருந்துவிட்டேன். இந்தியா திரும்பி 6 மாதத்தில் வேலையை விட்டுவிட்டு, திட்டப்படியே தொழில்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

இப்போது நீங்கள் ஒரு தொழில் அதிபர் என்று சொல்லலாம். ஒரு பொறியாளர் தொழிலதிபராக மாறிய போது என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது?

இன்னும் தொழில்முனைவோன்தான், தொழில் அதிபரெல்லாம் இல்லை:) (அதிபரென்ற பேரைக் கேட்டால் போதையாகத் தான் இருக்கிறது ;-)) முதலில் திட்டமிட்டதற்கு மேல் முதலீடு தேவைப்பட்டது. பல பங்குதாரர்கள் இருந்தால் முதலீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்கலாம் என்பதாலும், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக' இல்லாமல் ஒரு கடிவாளம் (checks and balances என்கிறார்களே அதுபோல) இருப்பது எல்லாவற்றுக்கும் நல்லது என்பதாலும் ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களை பங்குதாரர்களாகக் கொண்டேன். இருப்பினும் பொருளைச் சந்தைக்குக் கொண்டுவர, முன்பு திட்டமிட்டதை விட அதிக காலம் ஆகிவிட்டதால் செலவு அதிகரித்து மேலும் முதலீடு செய்யவேண்டியதாய்ப் போனது. வரும் டிசம்பரில்தான் எங்கள் கத்தரிக்காய் கடைவீதிக்கு வருகிறது. இனி எல்லாம் சுபமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கான ஆதரவு அரசுமட்டத்தில் எப்படி இருக்கிறது. அரசு அனுமதிகள் பெறுவதில் உங்கள் அனுபவங்களின் அடிப்படையில் இது பற்றி கூறுங்கள்?

எங்கள் தொழில் சிறுதொழிலாக இருப்பதாலும், மாசுக் கட்டுப்பாடு போன்ற சட்டங்களால் பாதிக்கப்படாத ஒன்றானதாலும், கோவையில் முக்குக்கு முன்னூறு தொழில் முனைவோர்கள் இருப்பதாலும் அனுமதிகள் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. அதே போல அரசு ஆதரவின் தேவையும் இங்கு எதுவும் இல்லை. எதையும் நாங்களும் முயற்சிக்கவில்லை. மின்சாரம் மட்டும் தடையில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். எங்கள் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் ஆண்டுமுழுவதும் சகஜம். இதனால் பல மணி நேரங்கள் உழைப்பு வீணாகிறது. இதைச் சீர் செய்தால் அரசுக்கு நன்றி கூறுவோம். சாலைகள் என்ற பெயரில் இருக்கும் தடங்களை மேம்படுத்தி வாகனங்கள் செல்லுமளவுக்கான உண்மையான சாலைகளாக போட்டார்களென்றாலே:P அரசு என்று ஒன்று இங்கு இயங்குவதை ஒப்புக்கொள்ளலாம். (தொலை தொடர்பில் நேர்த்தியின்மை ஒழிந்துவிட்டது. மின்சாரம், சாலை, குடிநீர் போன்றவற்றில் ஒழியும் என்று தோன்றவில்லை.) தொழிலுக்காக வேறு ஒன்றும் அரசு செய்யவேண்டியதில்லை. (முடிந்தால் அரசு அலுவலகங்களில் சேவைகளுக்கு'மேலதிகமாய்' செலவாகும் தொகையை தரப்படுத்தி பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்;-)

சொந்த தொழில் துவங்க எண்ணியதும் அதிலும் ஏற்கனவே இருக்கும் தொழில்களில் புகுந்துவிடாமல் புதிய ஒரு பொருளை உருவாக்கி உங்கள் தனித்தன்மையை நிரூபித்துள்ளீர்கள். இந்த ஐடியா எப்படி வந்தது?

இன்று இருக்கும் தொழில்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தயாரிப்பு, மற்றது சேவை. (தயாரிப்பு சேவை என்றும் ஒன்று உண்டு, Manufacturing Services, அது இப்போது வளர்ந்துவருகிறது) இவற்றுள் தயாரிப்பு தான் எங்கள் அனுபவத்துக்கேற்ற பிரிவு. தனிப்பட்ட அளவில் என் திறன் புத்துருவாக்கம், பொருள் வடிவமைப்பு என்பதால் நாம் புதுமையான ஒரு பொருளைத் தயாரிப்பதன்மூலம் நம் திறனுக்குத் தக்கதான பலன் பெறலாம் என்று எண்ணி புதிய பொருளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

சமீபத்தில் பதிவுகளை வாசிக்கவும் மீண்டும் வலைப்பதியவும் ஆரம்பித்துள்ளீர்கள். புதிய பதிவர்களில் நம்பிக்கையளிப்பவர்களாக நோன்றும் சில பதிவர்கள்?

வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் இன்னும் புதிய பதிவர்கள் அதிகம் பேரை வாசிக்கவில்லை. இந்த நிலையில் சுட்டுவது, அடையாளம் காட்டுவது எல்லாம் சரியாக இருக்காது எனவே பட்டியலிட இயலவில்லை. ஆனால், புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்' என்ற வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.:)

தமிழ்மணத்தின் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கிறதா?

முழுதும் இருக்கிறதென்றும் சொல்லமுடியவில்லை, இல்லையென்றும் சொல்ல முடியவில்லை. பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுள்ளன. ஏற்கனவே இருப்பவற்றில் சில வழுக்கள் களையப்படவேண்டி இருக்கின்றன. புதிதாய் வலைப்பதிக்க வருபவர் செய்யவேண்டிய செயல்களை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். சொல்வது எளிதாய் இருந்தாலும், தன் நேரத்தை செலவிட்டு மூளையைப் பயன்படுத்தி இதில் ஈடுபட இங்கே கிடைக்கும் உத்வேகம் இன்னும் போதாது. எனக்காவது பேர்(?) கிடைத்தது. இன்று தமிழ்மணத்துக்காக பங்களிக்கும் நண்பர்களுக்கு அதுவும் இல்லை. கைக்காசையும் போட்டு, உழைப்பையும் போட்டு, வசவுகளையும் வாங்கிக்கொண்டு, அவர்கள் இத்தனை செய்வதே பெரிது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இதையெல்லாம் இணையவெளியில் பதிவு செய்யக்கிடைத்த வாய்ப்புக்கு உங்களுக்கும் நன்றி.

Labels: , , , , ,